இயற்கை அன்னையின் எழில் வனப்பையெல்லாம்
கொண்டு விளங்கும் பருத்தித்துறை என்பதே எனது ஊராகும்.
முன்னர் இங்கு வாழ்ந்த விவசாயிகள் தமது முக்கிய பயிராகப்
பருத்தியைப் பயிரிட்டு அதன் மூலம் பெரும் வருமானத்தைப் பெற்று வாழ்ந்தனர். இதன் காரணமாகவே எனது ஊருக்குப் இப்பெயர் ஏற்பட்டது என்பர்.
சகல இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டு
பெருமையுடன் விளங்குவது எனது ஊர். எனது ஊரில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உண்டு. இங்கு பல
சமயங்களையும் சேர்ந்தோர் வசிக்கிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் எனப்
பல்வேறு தொழில் புரிவோர் எனது ஊரில் ஒற்றுமையுணர்வுடன்
வாழ்கிறார்கள்.
இங்கு பல பாடசலைகள் உண்டு. பல்லாயிரக்கணக்கான
மாணவர்கள் இப் பாடசாலைகளில் கல்வி பயில்கிறார்கள்.
கல்வியில் இவர்கள் மிக்க முன்னேற்றமுடையவர்களாக
விளங்குகிறார்கள்.
எனது ஊரில் சனசமூகநிலையங்கள், வைத்தியசாலை,
தபாற்கந்தோர், இளைஞர் மன்றங்கள், மாதர்சங்கம், உதவி
அரசாங்க அதிபர் பணிமனை போன்ற சேவைத் தலங்கள்
சிறப்புற மக்கள் பணிபுரிகின்றன. வணக்கத் தலங்கள் பல
எனது ஊரில் உள்ளன. அவை பல்வேறு சமயங்களைச்
சார்ந்தவை. அவை எனது ஊரின் அழகுக்கு அழகு
செய்கின்றன. அல்லற்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன.
இயற்கை அன்னையின் மிகப் பெரும் கொடையாக
விளங்கும் பரந்த கடலை அடுத்து எனது ஊர் அமைந்துள்ளது.
இங்குள்ள துறைமுகம் வரலாற்றுப் பெருமை பெற்றது. இப்பரந்த
கடல் தரும் செல்வங்களோ அளவற்றவை. மாலை
வேளைகளில் பெருந்தொகையானோர் பருத்தித்துறைக்
கடற்கரைக்கு உலாவச் செல்கிறார்கள். சிறந்த
பொழுதுபோக்குக்கு இக் கடற்கரை பயன்படுகிறது.
எனது ஊர் மக்கள் பொருளாதாரத்தில் சிறந்து
விளங்குகிறார்கள். சகலதுறைகளிலும் எனது ஊர்
முன்னேற்றமடைந்து வருகிறது. இது குறித்து யான்
பெருமையடைகிறேன்.
