நயினாதீவு ஸ்ரீ நாகபூசணியம்மன் ஆலயத்தில் அன்று தேர்த்திருவிழா. அதிகாலை ஆறுமணிக்கு நானும் என் அப்பாவும் புங்குடுதீவிலிருந்து புறப்பட்டோம். குறிகாட்டுவான் துறைமுகத்தைச் சென்றடைந்தோம். அங்கு ஆயிரக்கணக்கான
மக்கள் கியூ வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். நாங்களும் கியூ வரிசையில் நின்றோம். அரைமணி நேரத்தின் பின் மோட்டார்ப் படகொன்றில் ஏறினோம். சரியாக காலை ஏழு மணிக்கு அம்பாள் ஆலயத்தைச் சென்றடைந்தோம்.
நாங்கள் கோயிற் கோபுர வாயிலைச் சென்றடைந்த போது மூன்று அழகிய தேர்கள் அங்கு காட்சியளித்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாலாபுறமும் திரண்டு நின்றனர். சிறிது நேரத்தில் பக்தர்களின் அரோகரா கோஷம் வான் முட்ட ஒலிக்க, மேளவாத்தியங்கள் முழங்க, அம்பிகை அழகிய பீடத்தில் ஆரோகணித்துக் கோபுர வாயில் வழியாக வந்து கொண்டிருந்தார். பக்கத்தில் பிள்ளையாரும் முருகப் பெருமானும் அழகொளிரக் காட்சியளித்தனர்.
கோபுர வாயிலைக் கடந்ததும் பிள்ளையார் முன்னே சென்று சிறிய தேரில் எழுந்தருளினார்.ஸ்ரீ நாகபூசணியம்பாள்) தேர் மண்டபத்தையடைந்து அழகிய பெரிய சிற்பத் தேரில் ஆரோகணித்தார். பின்னே நின்ற மற்றொரு தேரில் முருகப்பெருமான் எழுந்தருளினர். மூன்று தேர்களையும் சூழப் பக்தர்கள் நீக்கமற நிறைந்து நின்றனர். எங்கும் அரோகரா கோஷம்ஒலித்தவண்ணமாகவே இருந்தது.
சிவாச்சாரியர்கள் பூசைகள் நடத்தி பஞ்சாராத்தி காட்டியபோது கடலெனத் திரண்டிருந்த பக்தர்கள் உச்சிமேற் கைகுவித்துப் பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர். பின்னர் மூன்று தேர்களின் முன்பும் குவிக்கப்பட்டிருந்த தேங்காய்களை எடுத்துப் பக்தர்கள் “பட பட” வென்று அடித்தனர். சிறிது நேரத்தில் மணி ஒலித்ததும் தேர் இருப்பிடத்தை விட்டு மெல்ல நகரத் தொடங்கியது. அப்போது நேரம் சரியாக எட்டு மணி என்பதை எனது கடிகாரம் காட்டியது. தேரின் பின்னே பெருந்திரளான
அடியார்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும் அடியழித்தும் கற்பூரச் சட்டிகளை ஏந்திய வண்ணமும் சென்று கொண்டிருந்தனர். அத்துடன் அம்பிகை அடியார்களின் பஜனைக் குழுவும் பின்தொடர்ந்தது.
தேர்கள் தெற்கு, மேற்கு, வடக்கு வீதி வழியாக மெல்ல
மெல்லச் சென்று பகல் பத்து மணியளவில் தேர் மண்டபத்தை வந்தடைந்தன. தேர் இருப்பிடத்தையடைந்ததும்
அர்ச்சனைக்காகக் காத்து நின்ற பக்தர்கள் தேர் அர்ச்சனை செய்தனர். பின்னர் குருக்களிடம் விபூதிப் பிரசாதம் பெற்றுக்
கொண்டு நண்பகல் பன்னிரண்டு மணியளவில் வீடு நோக்கிப் புறப்பட்டோம்.
அைைலகடல் நடுவில் அருள் ஒளி பரப்பும் அம்பிகையின் திருக்காட்சியினை என்னால் என்றுமே மறக்க முடியாதுள்ளது.
“நம்பினோர் கெடுவதில்லை
நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் அடைந்தால்
அதிக வரம் பெறலாம்.”

