Posted in

துருவன் யார்? துருவ நட்சத்திரமாக மாறிய சிறுவனின் முழு புராணக் கதை

🚨 Download Sri Lankan Emergency Numbers App for quick access to Police, Ambulance and Fire Brigade.

துருவன் யார்?

துருவன், உத்தானபாதன் என்னும் ஓர் அரசனுடைய புதல்வன். அந்த அரசனுக்கு இரண்டு மனைவிகள். மூத்தவளின் பெயர் சுநீதி. இளையவளின் பெயர் சுருசி.மூத்தவளுக்கு ஒரு பிள்ளை. இளையவளுக்கு ஒரு பிள்ளை.மூத்தவள் சுநீதியின் பிள்ளை பெயர் துருவன். இளையவள் சுருசியின் பிள்ளை பெயர் உத்தமன். அரசனுக்கு இளைய மனைவியின் மீது அதிக பிரியம். ஆகையால் அரசன் அவளை தன் அரண்மனையிலேயே வைத்திருந்தான். சுநீதியை வேறு அரண்மனையில் வைத்திருந்தான்.

துருவனுடைய தாய் பரம சாது. கடவுளிடம் பக்தி உடையவள். அதனால் அவள் ‘எல்லாம் அவன் செயல்’ என்று இருந்தாள். சுருசி கர்வம் கொண்டவள். தன் கணவன் தன்னிடம் அன்பாக இருந்ததனால் தன் மனம் போனபடி நடந்தாள். சுநீதியை அடிமைபோல நடத்தி வந்தாள்.

துருவனுக்கு ஐந்தாம் வயது பிறந்தது. அப்பொழுது ஒருநாள் அவன் விளையாடிக்கொண்டே தந்தையின் அரண்மனைக்குப் போனான். அரசன் அந்த சமயத்திலே உத்தமனை தன் மடியில் வைத்துக்கொண்டு ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அருகில் சுருசி நின்றுகொண்டிருந்தாள். துருவன் “அப்பா” என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடி அரசனுடைய மடியிலே உட்காரப் போனான்.

“துருவா நில்லு! நீ எப்படியடா மகாராஜாவின் மடியிலே வந்து உட்காரலாம்?” என்று துருவனைப் பிடித்து தூரத் தள்ளிவிட்டாள்.

துருவன் ஆத்திரத்துடன் அவளைப் பார்த்தான். அரசன் ஒன்றும் பேசவில்லை. சுருசி “அடேய்! நீ எனக்குப் பிறந்தவனா ? பிறகு எப்படி உனக்கு இந்த வாழ்வு கிடைக்கும் ? நீ கடவுளை எண்ணித் தவம் செய்! எனக்குப் பிள்ளையாகப் பிற ! அப்போது நீயும் உத்தமனைப் போல் இருக்கலாம். சீ போ!” என்று கோபித்துக் கொண்டாள்.

துருவன் அழுதுகொண்டே போய் தன் தாயிடம் நடந்ததைச் சொல்லி துக்கப்பட்டான். சுநீதி அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.

துருவன், “அம்மா, இனிமேல் நான் இங்கே இருக்க மாட்டேன். நம்முடைய வாழ்வு இழிவான வாழ்வு. இதில் எனக்கு விருப்பமில்லை. நான் தவம் செய்யப் போகிறேன். அதன் மூலம் பெருமை உண்டாகும் அல்லவா?” என்று சொன்னான்.சுநீதி, “இந்தச் சிறுவயதில் உனக்கு எப்படித் தவம் செய்யத் தெரியும்? அது எளிதான செயலா ? வேண்டாம்!” என்று தடுத்தாள்.

துருவன் பிடிவாதமாகப் புறப்பட்டு, தவம் செய்யக் காட்டுக்குப் போனான். வழியில் நாரதர் அவனைக் கண்டு, அவன் மனஉறுதியை அறிந்து மகிழ்ந்தார். உடனே அவனுக்கு திருமாலை நினைத்து தவம் செய்யும் வழியையும் சொல்லிக் கொடுத்தார்.

துருவன் நாரதரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, ஒரு பெரிய காட்டுக்குப் போனான். அங்கே நாரதர் சொல்லியபடி கடும் தவம் செய்தான். தியானத்தினால் அவனுக்குப் பசி, தாகம், பயம் ஒன்றுமே தெரியவில்லை.

ஒரு நாள் திருமால் அவன் தியானித்து வந்த ரூபத்திலேயே காட்சி கொடுத்தார். பகவானுடைய தரிசனம் கண்ட துருவன் அப்படியே பிரமித்து நின்று விட்டான். பிறகு துதித்தான்.

வணங்கினான். பகவான் அவனிடம் “அப்பா! உனக்கு என்றும் அழியாத பதவி தந்தோம். நீ இன்னும் சிலகாலம் அரசு செய்து பிறகு மோட்சத்திற்கு வரலாம். நீ இனி பெருமையோடு வாழ்வாய், போ!” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

துருவன் திருமாலைத் துதித்துக்கொண்டே நகருக்கு வந்தான். அதற்கு முன்பே துருவனை வழியில் கண்டுவிட்ட நாரதர், அரசனிடம் போய் அவனைக் கண்டித்தார். அரசன் தம் குற்றத்தை உணர்ந்து, “துருவன் எப்போது வருவான் ? அவன் முகத்தை எப்போது காண்பேன்?” என்று கவலை கொண்டு இருந்தான்.

அதனால் துருவன் வந்ததும் அவனைக் கட்டித்தழுவி முத்தமிட்டு மகிழ்ந்தான். சுருசியும் தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து, அவனை வாழ்த்தினாள். தாய் சுநீதியும் வாழ்த்தினாள்.

துருவன் அவர்கள் மூவரையும் வணங்கினான். நாடே துருவனுடைய முயற்சியைப் புகழ்ந்தது. பிறகு துருவனுக்கு உரிய வயது வந்ததும் அரசன் அவனை அரியணையில் அமர்த்தினான். துருவன் நீண்டகாலம் நீதி தவறாமல் ஆட்சி நடத்தினான். முடிவில் பகவான் அருளியபடி மோட்ச பதவியை அடைந்தான்.

இன்றும் அவன் துருவ நட்சத்திரம் என்ற பெயரில் ஆகாயத்தில் நட்சத்திரமாக விளங்குகிறான்.

 

 

🚨 Download Sri Lankan Emergency Numbers App for quick access to Police, Ambulance and Fire Brigade.

Leave a Reply