Education

மகாபலி யார்? வாமன அவதாரத்திற்குக் காரணமான முழு புராணக் கதை

|
Share: |

மகாபலி யார்? வாமன அவதாரத்திற்குக் காரணமான முழு புராணக் கதை

மகாபலி என்னும் ஓர் அசுர சக்கரவர்த்தி இருந்தான். வேத சாஸ்திரங்களெல்லாம் அறிந்தவன். இணையற்ற வீரன். பெரும் செல்வந்தன். யார் எதைக் கேட்டாலும் விரும்பிக் கொடுப்பதொன்றே கொள்கையாகக் கொண்ட கொடைவள்ளல். மகாபலி இவ்வளவு நல்லவனாக இருந்தாலும் தேவர்களிடத்தில் மாத்திரம் பகை கொண்டிருந்தான். அவர்களைப் பல வழியிலும் துன்பப்படுத்தி வந்தான். மகாபலி செய்யும் துன்பங்கள் தேவர்களால் பொறுக்க முடியாததாகி விட்டது. அவர்களெல்லோரும் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டனர். மகாவிஷ்ணு துஷ்ட நிக்ரஹமும் சிஷ்ட பரிபாலனமும் (கெட்டவர்களை அழிப்பதும் நல்லவர்களைப் பாதுகாப்பதும்) செய்பவரல்லவா? அதனால் பகவான் சாதுக்களாகிய தேவர்களிடத்தில் இரக்கம் கொண்டார். உடனே, “நீங்கள் செல்லுங்கள். உங்கள் கலக்கம் தீர விரைவில் அவனுடைய தொல்லையை அடக்குகிறோம்” என்றார். தேவர்கள் மகிழ்ச்சியுடன் பகவானைப் பணிந்து சென்றனர். பகவான் மகாபலியைத் தந்திரத்தினால் வெல்ல எண்ணினார். அதனால் அவர் காசிப முனிவரின் மனைவியாகிய அதிதி தேவிக்குப் பிள்ளையாகப் பிறந்தார். மிகவும் குள்ளமாக அவதரித்தார். அதனால் காசிப முனிவர் அந்தக் குழந்தைக்கு வாமனன் என்று பெயரிட்டார். மகாபலி அடிக்கடி யாகம் செய்வது வழக்கம். அப்படி ஒரு சமயம் அவன் ஒரு பெரிய யாகம் செய்தான். அப்போது வாமனர் தக்க வயதை அடைந்து சகல சாஸ்திரங்களிலும் வல்லவராக இருந்தார். ஆகையினால் அவரும் அந்த யாகத்துக்குப் போக எண்ணி, மகாபலி தன்னை மதிக்கும்படி வேஷம் கொண்டார். அந்தணர் வேடத்தில், ஒரு கையில் கமண்டலமும், ஒரு கையில் குடையும் கொண்டார். பாதங்களிலே பாதுகை அணிந்தார். உடனே ஆசிரமத்திலிருந்து புறப்பட்டு சிறுநடை நடந்து மகாபலியின் யாகசாலைக்குப் போய்ச் சேர்ந்தார். மகாபலி அவரை வணங்கி வரவேற்று ஆசனத்தில் உட்கார வைத்து “சுவாமி! தாங்கள் இங்கே வந்தது என் பாக்கியம். தங்களுக்கு வேண்டியதென்ன ? " என்று கேட்டான். வாமனர், “வள்ளலே, எனக்கு வேண்டியது என் காலால் மூன்றடி நிலம் தான் ! வேறொன்றும் அதிகமில்லை" என்றார். மகாபலி “அப்படியே தருகிறேன்” என்று நீரை அவர் கையில் வார்த்தான். மகாபலியிடம் தானம் வாங்கியதும் வாமனர் ஆகாயம் அளாவ விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியை அளந்தார்; மற்றோரடியால் ஆகாயத்தை அளந்தார்; அப்பால் இடமில்லாமையால் மூன்றாவது அடியை மகாபலியின் தலையிலே வைத்தார். அவன் பாதாளத்திலே புதைந்து போனான். பகவான் அவனை அங்கேயே சிறை செய்து தேவர்களை இரட்சித்தார்!    
Written by Ealuvi Editor
We write and curate insightful essays, technology updates, business trends, and educational topics exclusively in Tamil to empower minds.

Discussion (0)

No comments yet. Be the first to start the discussion!