Posted in

நான் வளர்க்கும் செல்லப்பிராணி

மஞ்சள் நிறம், மேலெங்கும் சடைகள், நீண்ட உடல்,
பார்த்தோரைப் பயமுறுத்தும் கண்கள், இவை அத்தனையும்
கொண்ட அழகுத் தோற்றம் உடையது “ஜிம்மி”. அதுவே
எங்கள் வீட்டு நாய். நான் அன்புடன் வளர்க்கும் மிருகமும்
அதுதான். எங்கள் வீட்டுக் காவற்காரனாக அது விளங்குகிறது.
நன்றி மிக்க ஜிம்மிக்குத் தற்போது வயது மூன்று. அதனை
எங்கள் அப்பா கொழும்பிலிருந்து சிறுகுட்டியாகக் கொண்டு
வந்தார். அதற்கென வீட்டு முற்றத்தில் கூண்டு அமைத்து
அதில் விட்டு வளர்த்தோம். ஜிம்மிக்குத் தினந்தோறும் நல்ல
உணவு கொடுப்போம். இறைச்சி என்றால் அதற்கு நல்ல விருப்பம்.
அதற்கென எங்கள் அண்ணா தனியாக இறைச்சி வாங்கி
வந்து வைப்பார். அண்ணா தற்போது கொழும்பு பல்கலைக்
கழகத்திற் படிக்கிறார். அதனால் கொழும்பு சென்று விட்டார்.
இதனால் ஜிம்மியை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.
நான் தினந்தோறும் காலையில் ஜிம்மியைக்
குளிப்பாட்டுவேன். அதன் பின்னர் அதற்கு உணவு கொடுப்பேன்.
ஜிம்மி என்று அழைத்தாற்போதும் அது துள்ளிக் குதித்து ஓடி
வரும். ஆனால் அதனை வீட்டுப் படலைக்கு வெளியே செல்ல
நான் விடுவதில்லை. பகல் நேரத்தில் அதனைக் கூண்டில்
அடைத்து விடுவேன். நான் பாடசாலைக்குச் சென்று வந்ததும்
ஜிம்மிக்கு உணவு கொடுப்பேன். நான் வீட்டில் இல்லாத
வேளைகளில் என் அம்மா ஜிம்மிக்கு உணவு கொடுப்பார்.
எங்கள் வீட்டுக்கு வருவோருக்கு ஜிம்மியைக் கண்டாற்
பயம். அது குரைக்கும் தொனியைக் கேட்டே சிலர் ஓட்டம்
பிடித்து விடுவர். ஜிம்மியை நாங்கள் இரவிற்றான் கூண்டிலிருந்து
வெளியே விடுவோம். அது இரவு முழுவதும் வீட்டைச் சுற்றிச்
சுற்றி வரும்; காவல் காக்கும்.

மாலை வேளைகளில் நான் ஜிம்மியுடன் முற்றத்தில்
விளையாடுவேன் .பந்தை உருட்டி நான்விளையாடும் போது
அதுவும் என்னுடன் சேர்ந்து ஓடிவரும். பந்தை வாயாற் கௌவிக்
கொண்டு ஓடும். அதைப்பார்க்க எனக்கு மிக்க ஆனந்தம்.
எங்கள் வீட்டில் உள்ளோர் ஜிம்மி மீது மிக்க அன்புள்ளவர்கள்.
அவர்களைக் கண்டதும் அது வாலைக் குழைத்துத் துள்ளி எழுந்து பாய்ந்து விளையாட்டுக்காட்டும்.
நான் ஜிம்மியை விரும்பி வளர்க்கிறேன். அதனை எனது தோழனாகக் கருதுகிறேன். அதற்கு உணவு கொடுக்காது நான் உணவு உண்பதில்லை.
ஞாயிற்றுக் கிழமைகளில் நான் ஜிம்மியை சங்கிலியில் பூட்டிக் கடற்கரைக்கு அழைத்துச் செல்வேன். அங்கு உலாவ
வருவோர் எங்களைப் பார்த்துப் பார்த்துப் போவார்கள். என்
அன்புத்தோழனான ஜிம்மி என்னைக் காணாவிட்டால் மிக்க
கவலையுடன் படுத்திருக்கும். என்னைக் கண்டதும் உரக்கக்
குரைத்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும். என் மீது மிக்க
அன்புள்ள ஜிம்மியை யான் பெரிதும் விரும்புகிறேன்.

Leave a Reply