Posted in

காளிங்க நர்த்தனம் என்றால் என்ன? காளிங்க நாகத்தை அடக்கிய கிருஷ்ணரின் முழு புராணக் கதை

🚨 Download Sri Lankan Emergency Numbers App for quick access to Police, Ambulance and Fire Brigade.

காளிங்க நர்த்தனம்

மகா விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது வசுதேவர் என்கிற யாதவ அரசனுக்குப் பிள்ளையாகப் பிறந்தார். யசோதை என்கிற பெண்ணிடம் வளர்ந்து வளர்ந்தார். அவருக்குக் கிருஷ்ணன் என்று பெயரிட்டார்கள். ஆயர்குலப் பிள்ளைகள் மாடு மேய்ப்பது வழக்கமல்லவா? கிருஷ்ண பகவானும் சிறுபிள்ளையாக இருந்ததனால் அவர்களோடு சேர்ந்து மாடு மேய்க்கப் போவார். விளையாடுவார்; பாடுவார்; புல்லாங்குழல் ஊதி மகிழ்வார்.

அவர் வழக்கம்போல் ஒருநாள் மாடு மேய்க்கப் போனார். பையன்கள் எல்லோரும் பலவாறாக விளையாடிக் கொண்டு யமுனா நதிக்குப் போனார்கள். கிருஷ்ணனும் போனார்.

அந்த நதியில் ‘காளிந்தி’ என்கிற ஒரு மடு இருந்தது. அது மிகவும் ஆழமுடையது. பார்ப்பதற்கு பயங்கரமாயிருந்தது. அதன் கரையில் இருந்த மரங்களெல்லாம் எரிந்து போயிருந்தது. அதன் மீது பட்டு வரும் காற்றும் வெப்பமாகத் தகித்தது. அதற்கு நேராக மேலே பறக்கும் பறவைகளும் அதில் விழுந்து மடிந்தன. இவற்றைப் பார்த்த ஆயர்குலப் பிள்ளைகள் அதனருகில் போக அஞ்சினர்.ஆனால், கிருஷ்ண பகவான் துணிச்சலாக அதனருகே போனார். அப்போது மற்ற சிறுவர்கள் “கிருஷ்ணா, கிருஷ்ணா! போகாதே! உயிருக்கு ஆபத்து!” என்று கூவித் தடுத்தனர்.

பகவானோ தனது ஆடைகளை வரிந்து கட்டிக்கொண்டு, கரையின் மீதிருந்த ஒரு மரத்தின் மீதேறி அந்த மடுவிலே திடீரென்று குதித்தார்.கிருஷ்ணர் குதித்தவுடன் ஒரு பெரிய ஐந்து தலைநாகம் அந்த மடுவிலிருந்து பயங்கரமாகச் சீறிக்கொண்டு வெளியே வந்தது.

சீற்றத்துடன் விஷத்தைக் கக்கியது. அதனுடன் வேறு சில பாம்புகளும் கிளம்பின. மற்ற சிறுவர்கள் பயத்தில் கூவினர். கிருஷ்ணரோ பயப்படவில்லை.சிறுவர்களில் சிலர் நகருக்குள் ஓடி “ஐயோ! கிருஷ்ணன் காளிந்தி மடுவில் குதித்து விட்டான். அவனைப் பாம்புகள் சுற்றிக் கொண்டு கடிக்கின்றன. கிருஷ்ணன் செத்தான்” என்று கத்தினார்கள்.

இதைக் கேட்டதும் மற்ற எல்லோரும் “ஐயையோ ! அந்த மடுவில் விழுந்தவனும் பிழைப்பானா? அதில் காளிங்கன் என்னும் பாம்பு விஷத்தைக் கக்கிக்கொண்டு வாழ்கிறதே! அதில் விஷ நெருப்பு வீசுமே! கிருஷ்ணன் எப்படி அதில் இறங்கினான்? ஏன் இறங்கினான்?” என்று கத்திக்கொண்டே ஓடிவந்தனர்.

தம்மைப் பாம்புகள் சுற்றிக்கொண்டதும் பகவான் சற்று நேரம் சும்மா இருந்தார். பிறகு தமது உடலை ஒருமுறை குலுக்கினார். பாம்புகள் சிதறி ஓடின. அப்போது காளிங்கன் என்ற பெரிய பாம்பு கிருஷ்ணனைப் பார்த்து படமெடுத்துக்கொண்டு சீறியது.பகவான் அதன் தலைமீது தாவி ஏறி நின்று, புன்சிரிப்பு சிரித்துக் கொண்டே நடனம் ஆடினார். பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

கிருஷ்ண பகவான் குதிக்கக் குதிக்க அந்தப் பாம்பு மூச்சுத் திணறிப்போய் இங்குமங்கும் ஓடியது. சீறிச்சீறி விஷம் கக்கியது. சற்று நேரத்தில் ஆட்டம் அடங்கி சோர்வு அடைந்தது. கிருஷ்ணர் போதும் இதற்கு தண்டனை என்று எண்ணி அதை விட்டுக் குதித்தார்.

”ஏ, கொடிய சர்ப்பமே! உன்னால் எத்தனை பேர் இதில் இறந்தார்கள் ? ஓடு, இதைவிட்டு ! உன் குடும்பத்துடன் ஓடி விடு! இருந்தால் தப்ப மாட்டாய்!” என்று சொல்லி அந்த மடுவை விட்டுத் துரத்தி விட்டார்.

காளிங்கன் ‘செத்தேன், பிழைத்தேன் !’ என்று தம் இனத்துடன் ஒடிவிட்டது.பிறகு கிருஷ்ண பகவான் கரையேறினார். எல்லோரும் அவரைப் புகழ்ந்தனர். கட்டித் தழுவிக்கொண்டனர்.அந்த மடுவும் பரிசுத்தம் அடைந்து எல்லோருக்கும் பயன்படலாயிற்று!

 

 

🚨 Download Sri Lankan Emergency Numbers App for quick access to Police, Ambulance and Fire Brigade.

Leave a Reply