Posted in

பரசுராமர் யார்? விஷ்ணுவின் ஆறாவது அவதாரத்தின் முழு புராணக் கதை

🚨 Download Sri Lankan Emergency Numbers App for quick access to Police, Ambulance and Fire Brigade.

பரசுராமர் யார்?

பரசுராமர், ஜமதக்கினி என்னும் முனிவருடைய கடைசிப் பிள்ளை. ஜமதக்கினி முனிவருக்கு நான்கு பிள்ளைகள். நால்வரும் வேத சாஸ்திரங்களை ஓதி உணர்ந்து தேர்ந்தவர்கள்.முனிவர் வழக்கம்போல ஒருநாள் ஹோமம் செய்யத் தொடங்கினார். முனிவருடைய மனைவி ஹோமத்திற்குத் தீர்த்தம் கொண்டுவர ஆற்றுக்குப் போனாள்.

ஆற்றிலே கந்தர்வர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த வேடிக்கையைப் பார்த்துக்கொண்டு அவள் அங்கேயே நின்று விட்டாள். அதனால் ஹோமம் தடைப்பட்டது. முனிவர் தம் மனைவியின் மீது கோபம் கொண்டார்.பரசுராமர் முதலிய நால்வரும் தந்தையின் கோபம் கண்டு, அவர் என்ன செய்வாரோ என்று பயந்தனர்.

முனிவர் அவர்களைப் பார்த்து “உங்கள் தாயார் வந்ததும் அவளை வாளால் வெட்டிக் கொன்று விடுங்கள். அவள் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது” என்று கட்டளை இட்டார். அதைக் கேட்டதும் பரசுராமர் தனது அண்ணன்மார்களின் முகத்தைப் பார்த்தார்.

அவர்கள் மூவரும் முனிவரை வணங்கி “பெற்று வளர்த்த தாயைக் கொல்லத் துணியும் பிள்ளைகளுண்டோ ? அது தர்மமா ? நாங்கள் அந்தக் கொடுங்கொலை செய்யத் துணிய மாட்டோம்” என்றனர்.

முனிவர் கோபம் கொண்டு பரசுராமரைப் பார்த்தார்.பரசுராமர், “தந்தை எல்லாமுணர்ந்த பெரியவர். நியாயமில்லாத பாவச் செயலைச் செய்ய அவர் கட்டளையிடுவாரா ? இடமாட்டார். தவிர, ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றெண்ணி “தங்களது கட்டளைப்படி நடக்கக் காத்திருக்கிறேன்” என்றார்.

பரசுராமா ! ஹோமம் நிறைவேறாமல் செய்த உன் தாயையும், என் கட்டளையை ஏற்க மறுத்த உன் அண்ணன்மார்களையும் இப்பொழுது நீ வெட்டி விட வேண்டும். என்ன சொல்லுகிறாய்?” என்று முனிவர் கேட்டார்.பரசுராமர், “இதோ சித்தமாயிருக்கிறேன்” என்று கோடரியைக் கையிலெடுத்தார். இதற்குள் தாயாரும் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தாள். வந்ததும் அவள் தன் குற்றமுணர்ந்து தன் பிள்ளையின் முன் தலைகுனிந்து நின்றாள்.

பரசுராமர் தனது தாயையும், தமையன்மார்களையும் வெட்டித் துண்டாக்கினார். எவரும் செய்தற்கு அரிய செயல் அல்லவா இது?இதனால் முனிவர் மகிழ்ந்து பரசுராமரைத் தழுவிக்கொண்டு “உனக்கென்ன வரம் வேண்டும்; கேள்” என்றார்.

பரசுராமர் தந்தையைப் பணிந்து, “என் தாயாரையும் என் அண்ணன்மார்களையும் உயிர் பிழைக்கச் செய்ய வேண்டும். நான் செய்த இந்தச் செயலைப் பற்றி அவர்களுக்கு நினைவே இருக்கக் கூடாது. இவையே நான் வேண்டும் வரம் ” என்று கேட்டார். முனிவர், “மகனே! உன் மீது எனக்கு எப்போதும் இல்லாத அன்பு உண்டாயிருக்கிறது. சொன்னசொற் கேளாத பிள்ளைகளும்

பிள்ளைகள் ஆவரோ ? பரசுராமா, நீ அறிவாளி. நல்ல வரம் கேட்டாய். மிக்க மகிழ்ச்சி. அப்படியே ஆகட்டும் ” என்றார்.பரசுராமரின் தாயாரும், அண்ணன்மார்களும் உடனே உயிர்த்து எழுந்தார்கள். பரசுராமர் அவர்களை வணங்கி அவர்களிடம் ஆசி பெற்றார்.

 

🚨 Download Sri Lankan Emergency Numbers App for quick access to Police, Ambulance and Fire Brigade.

Leave a Reply