history

பீஷ்மரும் பரசுராமரும் ஏன் போரிட்டனர்? மகாபாரதத்தின் மாபெரும் யுத்தக் கதை

|
Share: |

பீஷ்மரும் பரசுராமரும்

பீஷ்மர் தன் வாழ்வில் கல்யாணம் செய்துகொள்வதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தார் அல்லவா ? அதற்கு ஒரு சோதனை ஏற்பட்டது. காசிதேச மன்னனுக்கு 'அம்பை, அம்பிகை, அம்பாலிகை' என்று மூன்று பெண்கள் இருந்தனர். அவர்களுக்கு அந்த அரசன் சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தான். பீஷ்மர் அந்த சுயம்வரத்திற்குப் போனார். அங்கு வந்த இளவரசர்கள் அனைவரையும் தோல்வியுறச் செய்து வெற்றி கண்டார். அந்தப் பெண்கள் மூவரையும் தனது ரதத்தில் ஏற்றி அமர்த்திக் கொண்டு தமது நகரத்திற்கு வந்தார். அம்பிகையையும் அம்பாலிகையையும் அவர்களது சம்மதத்தின் பேரில் தமது தம்பிக்குத் திருமணம் செய்வித்தார். அம்பை, சாலுவன் என்கிற வேறொரு அரசனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். பீஷ்மர் அவள் விருப்பப்படியே அவளை சாலுவனிடம் அனுப்பினார். சாலுவன் அவளை விரும்பவில்லை. ஆகையால், அவள் திரும்பி பீஷ்மரிடம் வந்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி அவரை வேண்டினாள். பீஷ்மரோ, “நான் பிரம்மச்சாரி விரதம் கொண்டவன். ஆகையினால் உன்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்” என்றார். பீஷ்மர் மீது அம்பை கோபம் கொண்டு அவருடைய குருவாகிய பரசுராமரிடம் போய் கூறினாள். பரசுராமர் வந்து பீஷ்மரைப் பார்த்து, “நீதானே இந்தக் கன்னிகையை எடுத்து வந்தாய் ? ஆதலால் நீதான் மணந்து கொண்டு இவளுடன் வாழவேண்டும்” என்றார். அதற்கு பீஷ்மர், “நான் என் தம்பிக்காகத்தான் இவளைக் கொண்டு வந்தேன். இது சத்திரியர்களுடைய வழக்கம் தானே? ஆகையால் நான் இவளைக் கொண்டுவந்தது குற்றமாகாது. ஆனால் இவளோ என் தம்பியை மணந்துகொள்ள விரும்பவில்லை. அதற்கு நான் என்ன செய்யட்டும்” என்றார். பரசுராமரோ பீஷ்மரைக் கட்டாயப்படுத்தினார். பீஷ்மர் மறுத்தார். “அப்படியானால் நான் உன்னை நாசம் செய்துவிட்டுத்தான் போவேன்” என்று பரசுராமர் மிரட்டினார். உடனே இருவருக்கும் சண்டை மூண்டது. மூர்க்கமான சண்டை நடந்தது. முடிவில் பரசுராமர் தோல்வி அடைந்தார். பீஷ்மருடைய சாமர்த்தியத்தைக் கண்டு பரசுராமர் மகிழ்ச்சியடைந்தார். பீஷ்மரைத் தழுவிக் கொண்டார். “அப்பா, நீ உன் ஆயுள் உள்ள வரையில் கல்யாணம் செய்துகொள்வதில்லை என்று சொன்னாய். அதற்கு ஒரு சோதனை வந்தது. அந்தச் சோதனையில் நீ தோற்றுவிடாமல் உன் வாக்கைக் காப்பாற்றினாய். உன்னுடைய மகிமை பெரிது. அதை உலகுக்குக் காட்டவே உன்னோடு இவ்வளவு தூரம் நான் போரிட்டேன்” என்றார். உங்களது பீஷ்மர் அவரை வணங்கி, "எல்லாம் ஆசீர்வாதத்தால்தான். ஆயினும் குரு என்றும் பாராமல் தங்களோடு சண்டை செய்து தொந்தரவு கொடுத்துவிட்டேன். அதை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது” என்றார். பரசுராமர், “அது உனக்குக் குறைவாகாது. வருத்தப்படாதே. நீ என்னை வணங்கி வந்ததால் என் புகழும் நிலைத்தது” என்று சொல்லி ஆசீர்வதித்தார். அம்பை தன் தவறுக்கு மனம் வருந்தி, தவம் செய்யக் காட்டுக்குப் போனாள்.  
Written by Ealuvi Editor
We write and curate insightful essays, technology updates, business trends, and educational topics exclusively in Tamil to empower minds.

Discussion (2)

Priya Jul 02, 2026

மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

Suja Jul 02, 2026

மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.