கௌசிகன் யார்? குழந்தைகளுக்கான எளிய புராண விளக்கம்
கௌசிகன் என்கிற பிராமணன் காட்டிலே போய்த் தவம் செய்தான். அவனுடைய ஆசிரமத்திற்குப் பக்கத்தில் ஒரு மரம் இருந்தது. அதன் மேல் இருந்த பறவை எச்சமிட்டது. அது அவன் தலைமீது விழுந்தது. அதனால் அவன் கோபம் கொண்டு, உயரே நிமிர்ந்து பறவையைப் பார்த்தான். பார்த்ததும் அந்தப் பறவை எரிந்து சாம்பலானது.
அதனால் கௌசிகன் தனக்குத் தவம் கைக்கு வந்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தான். தினந்தோறும் அவன் பக்கத்து கிராமத்தில் பிச்சையெடுத்து உண்பது வழக்கம். இன்றும் அப்படியே அவன் பிச்சை எடுக்கப் போனான்.

ஒரு வீட்டிலே போய் “தாயே, பிச்சை!” என்றான். அந்த வீட்டுப்பெண் அப்போது தன் கணவனுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
ஆகையால் அவள், “இதோ வருகிறேன்” என்று குரல் கொடுத்தாள்.
கௌசிகன் கொஞ்சநேரம் காத்துக் கொண்டிருந்தான். அவள் வரவில்லை. அதனால் அவன் கோபம் கொண்டு, “வரட்டும் அவள்” என்று சொல்லிக் கொண்டிருந்தான். தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்துவிட்டு, அவள் பிச்சை கொண்டு வந்து போட்டாள்.

கௌசிகன், அந்தப் பெண்மணியை விழித்துப் பார்த்து “ஹும்” என்றான். அந்தப் பெண்மணி உடனே, “கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா ? நான் பறவை அல்ல” என்றாள்.
அவள் இப்படிச் சொன்னதும், காட்டிலே நடந்தது இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று கௌசிகன் ஆச்சரியப்பட்டான். அப்படியே மரம் போல் நின்றான்.
அந்தப் பெண்மணி “உனது கோபம் என்னை என்ன செய்யும்? நானா தவறு செய்தேன். என் கடமையைச் செய்து முடித்துவிட்டு வந்தேன்” என்றாள்.
கௌசிகன் அவளுடைய ஞானத்தைக் கண்டு கர்வம் அடங்கி வணங்கி, “அம்மணி, இந்த ஞானம் உங்களுக்கு எப்படி வந்தது?” என்று கேட்டான்.
அதற்கு அவள் “நான் என்னுடைய கணவனைத் தெய்வமாக எண்ணி நடக்கிறேன். அதுதானே கற்புடைய மாதரின் கடமை! அதன்படி அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். நீர் வந்தீர்.என் கடமையை முடித்துவிட்டு உம்மைக் கவனித்தேன். சுவாமி, கணவனை வணங்குவதுதான் எனக்கு பலம். அதைத்தவிர வேறொன்றுமில்லை” என்றாள்.

கௌசிகன், “தாயே, எனக்கு அந்த ஞானம் கிட்டவில்லையே! நான் என்ன செய்யட்டும் ?” என்று கேட்டான்.
அந்தப் பெண்மணி “சுவாமி, மிதிலையில் ஒரு கடைக்காரன் இருக்கிறான். அவன் தர்மவான். அவன் பெயர் ‘தர்மவிபாதன்’. அவனிடம் போனால் எல்லாமே தெரிந்துகொள்ளலாம்” என்றாள்.
கௌசிகன் அந்தப் பெண்மணியை வணங்கி விடைபெற்று மிதிலைக்குப் புறப்பட்டான். போகும்போது, “போயும் போயும் ஒரு கடைக்காரனிடமா நாம் ஞானத்தை அடையப் போகிறோம்! அதையும் பார்ப்போம் ” என்று எண்ணிக்கொண்டே போனான்.

மிதிலைக்குப் போய் தர்மவிபாதன் இருக்குமிடத்தைத் தேடி அவனைக் கண்டான். தர்மவிபாதன் அவனைப் பார்த்ததும்,
“வாரும்! கெளசிகரே! உட்காரும்!” என்றான். பிறகு தன் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
கௌசிகன், “இது என்ன ஆச்சரியம் ! இவனுக்கு நமது பெயர் எப்படித் தெரிந்தது?” என்று எண்ணிக்கொண்டு உட்கார்ந்தான். தர்மவிபாதன் தன் வேலையை முடித்தபிறகு கெளசிகனை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குப் போனான்.
வீட்டில் அவனை ஓரிடத்தில் உட்காரவைத்து, “இங்கேயே உட்கார்ந்திரும். நீர் வந்திருக்கிற காரியம் எனக்குத் தெரியும். நான் செய்ய வேண்டிய வேலை பாக்கியிருக்கிறது. செய்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லி வீட்டிற்குள்ளே போனான்.
கௌசிகன் பதிலொன்றும் சொல்லாமல் உட்கார்ந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளே போனதும் கிழவர்களாக இருந்த தன் தாயையும் தந்தையையும் குளிப்பாட்டி உடம்பு துடைத்தான். அவர்களுக்கு உலர்ந்த துணிமணிகளை உடுத்தினான். பிறகு அவர்களுக்கு அன்போடு உணவு ஊட்டினான். அவர்கள் உண்ட பிறகு அவர்களைத் தக்க இடத்தில் உட்கார வைத்தான்.

அவர்களிடம் “விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். விசாரித்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
கௌசிகன் அவர்களைக் கண்டதும் எழுந்தான். தர்மவிபாதன் “உட்காரும், நான் வணங்கும் தெய்வம் என்னுடைய தாயும் தந்தையும் தான். அவர்களுக்குப் பணி செய்வதே நான் செய்யும் தவம். உமக்குத் தாய் தந்தையர் இருக்கிறார்கள் அல்லவா ? அவர்களை ஆதரிக்க வேண்டிய கடமை உம்முடையதல்லவா? அதைச் செய்யாமல் நீர் தவம் செய்ய வந்துவிட்டீர் ! அவர்களுடைய ஆசீர்வாதம் உமக்கு இல்லாமல் போயிற்று. அதனாலேதான் உமக்கு ஞானம் உண்டாகவில்லை. இப்பொழுதே வீட்டிற்குப் போய் அவர்களைக் கவனியும். அவர்களை
வேண்டி, அவர்களுக்குப் பிரியமானதைச் செய்யும். அதுதான் சிறந்த தவம். அதுதான் புண்ணியம். அதுதான் நீர் செய்யவேண்டிய கடமைகளுள் முதன்மையானது. அதைச் செய்தால் உமக்கு எல்லாம் கைகூடும்” என்றான்.

கௌசிகன் அதைக் கேட்டு, “உண்மையான உபதேசம் பெற்றேன். அப்படியே நடக்கிறேன்” என்று சொல்லி அவ்விடமிருந்து புறப்பட்டு தன் ஊர்போய் தாய் தந்தையரை வழிபாடு செய்து அனைத்து நன்மைகளையும் பெற்றான்.
