Posted in

பிரகலாதன்

🚨 Download Sri Lankan Emergency Numbers App for quick access to Police, Ambulance and Fire Brigade.

பிரகலாதன்

இரண்யகசிபு, இரண்யாட்சன் என்ற இரண்டு அசுரர்கள் இருந்தனர். அவர்கள் கடவுளை நோக்கித் தவம் செய்தனர். கடவுள் அவர்களுக்கு நீண்டகால ஆயுளைத் தந்தார். ஒருவராலும் வெல்லமுடியாத பலத்தையும் கொடுத்தார். அதனால் அவர்கள் கர்வம் கொண்டு மனம் போனபடி நடக்கத் துணிந்தனர். தேவர்களுக்குப் பலவிதமான தொல்லைகளையும் கொடுத்தனர்.

தேவர்கள் நல்லவர்கள். அசுரர்கள் பொல்லாதவர்கள். அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்போதும் பகை உண்டு. ஆனால் கடவுள் எப்போதும் நல்லவர் பக்கம்தான் இருப்பார். நல்லவர்களுக்குத் துன்பம் செய்கிறவர்களை அவர் நிச்சயமாக அழிப்பார். ஆகையால் கடவுள் இவர்கள் இரண்டுபேரையும் தண்டிக்கும் சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

இரண்யாட்சன் ஒரு கொடிய செயலைச் செய்தான். அதனால் அவனை மகாவிஷ்ணு கொன்று விட்டார். எனவே இரண்யகசிபு மகாவிஷ்ணுவிடம் பகை கொண்டான். இதன் காரணமாக அவன் மகாவிஷ்ணுவை தெய்வமாக நினைத்துத் தொழுகிறவர்களைப் பிடித்து தண்டித்து வந்தான். அவருடைய பெயர் சொல்வதும் கூடாதென்று கட்டளை இட்டான்.

‘இரண்யாய நம’ என்று தன் பெயரைச் சொல்லி வணங்க வேண்டும் என்று எல்லோருக்கும் கட்டளையிட்டான். எல்லோரும் பயந்து அவனுடைய கட்டளைப்படியே நடந்து வந்தனர்.

 

இரண்யனுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அவனுக்கு பிரகலாதன் என்று பெயரிட்டான். பிரகலாதன் நல்ல குணங்கள் உடையவன். மகாவிஷ்ணுவின் மேல் அவன் மிகுந்த பக்தி கொண்டான். ஆகையால் அவரையே தனக்கு தெய்வமாகக் கொண்டான்.

இரண்யன் தன் மகனை குல குருவிடம் கல்வி கற்க அனுப்பினான். குரு அவனுக்கு ‘இரண்யாய நம’ என்று சொல்லும்படி முதலிலேயே சொல்லிக் கொடுத்தார். ஆனால் பிரகலாதனோ ‘நாராயணாய நம:’ என்று சொன்னான். அதைக் கேட்டு ஆசிரியர் ஆச்சரியம் அடைந்தார். “இவனுக்கு இளம் வயதிலேயே மகாவிஷ்ணுவே தெய்வம் என்று எப்படித் தெரிந்தது? இவன் குணம் தந்தையின் குணத்துக்கு நேர்மாறாக இருக்கிறதே! ஈசன் செயலை யாரறிவார்?” என்று எண்ணி அவன் மேல் அன்பு கொண்டார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட இரண்யன் பிரகலாதனை தன் பக்கத்தில் அழைத்து, “அந்த மகாவிஷ்ணு உன்னுடைய சிற்றப்பனைக் கொன்றவன்; நமக்குப் பகைவன். அவனை ஏன் புகழ்கிறாய்? என் பெயரையே சொல்லு” என்று புத்தி சொன்னான்.

பிரகலாதன் அதைக் கேட்கவில்லை. ‘நாராயணாய நம:’ என்றே சொன்னான். இரண்யன் மிரட்டிப் பார்த்தான். பிரகலாதன் இணங்கவில்லை. அதனால் அவன் கோபம் கொண்டு, பிரகலாதனை யானையின் காலில் மிதிபட வைத்து கொன்றுவிட கொலையாளிக்கு உத்தரவிட்டான்.

இரண்யன் கட்டளைப்படி கொலையாளிகள் பிரகலாதனை அழைத்துப் போய் ஓரிடத்தில் நிறுத்தி அவன் மீது யானையை ஏவினார்கள். யானை பிரகலாதனைக் கண்டதும் தூர விலகிப் போய்விட்டது.

 

பிறகு இரண்யன் பிரகலாதனைக் கடலிலே வீசிக் கொல்லும்படி சொன்னான். அப்படியும் அவன் இறக்கவில்லை. பிறகு அந்தப் பாதகன்,
பிள்ளையை மலையிலிருந்து கீழே உருட்டிவிடும்படி சொன்னான். அதிலும் பிரகலாதன் தப்பினான். ஒவ்வொரு தடவையும் அவனை பகவான்
காப்பாற்றி வந்தார்.

இதனால் பகவான் மீது பிரகலாதனுக்கு இன்னும் அதிக பக்தி உண்டாயிற்று. அவன் மகாவிஷ்ணுவையே துதித்தான்.
இரண்யன் என்ன செய்வான்? மிகவும் ஆத்திரம் கொண்டான்.

“அடேய்! நீ சொல்லும் அந்த தெய்வம் எங்கேயடா இருக்கிறது? அதனை எனக்கு இப்போது காட்டு” என்றான்.

“நான் சொல்லும் தெய்வம் எங்கும் இருக்கிறது. அது இல்லாத இடமில்லை” என்றான் பிரகலாதன்.

இரண்யன் கோபத்துடன், தன் முன்பு இருந்த ஒரு தூணைக் காட்டி, “இந்தத் தூணிலிருக்குமா அந்த தெய்வம் ?” என்று கேட்டான்.
பிரகலாதன், “தூணிலும் இருக்கும். துரும்பிலும் இருக்கும்” என்றான்.

இரண்யன், “இந்தத் தூணில் இருக்கிறதா என்று பார்க்கிறேன்” என்றபடி தன் கையில் இருந்த கதாயுதத்தால் தூணை உடைத்தான்.
மகாவிஷ்ணு அந்த நிமிடமே நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்து இரண்யனைக் கொன்றார்.

பிறகு பிரகலாதன் ஆட்சிப் பொறுப்பு ஏற்று நீதி தவறாமல் அரசு செய்தான். பின்பு மோட்சம் அடைந்தான் !

 

🚨 Download Sri Lankan Emergency Numbers App for quick access to Police, Ambulance and Fire Brigade.

Leave a Reply