பீஷ்மர் யார்?
சந்தனு என்ற ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு ‘கங்கை’ என்று ஒரு மனைவியும் ‘காங்கேயன்’ என்று ஒரு மகனும் இருந்தனர்.
காங்கேயன் பெரிய பலசாலியாகவும் சிறந்த அறிவாளியாகவும் விளங்கினான். சந்தனு அவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தான். காங்கேயன் நன்னடத்தை உடையவன். ஆகையினால், அவனிடம் குடிமக்களும் அன்புடையவர்களாக இருந்தனர்.

‘சத்தியவதி’ என்கிற ஒரு பெண்ணை மணந்துகொள்ள சந்தனு விருப்பப்பட்டான். அந்தப் பெண்ணின் தந்தையிடம் அவன் தானே நேரில்போய் பெண் கேட்டான். பெண்ணின் தந்தை “மகாராஜாவே, என் பெண்ணுக்குப் பிறக்கும் பிள்ளைக்குப் பட்டம் கட்டுவதானால் நான் பெண் தருகிறேன். இது என்னுடைய விருப்பம். நான் இதைக் கேட்பதுபற்றி என்னை மன்னிக்க வேண்டும்” என்று கேட்டான்.
சந்தனு “நீ கேட்டது நியாயம்தான். தன் மகளின் இன்ப துன்பங்களைக் கவனிக்க வேண்டியது தந்தையின் கடமையல்லவா? ஆகையினால் நீ கேட்டாய். இருக்கட்டும். நான் பிறகு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அரண்மனைக்குப் போனான்.
சந்தனு என்ன செய்தான் ? தனக்குப் பிறகு தன் மகன் காங்கேயனுக்கு அல்லவா அவன் பட்டம் கட்ட வேண்டும்? குடிமக்களும் அவனைத்தானே விரும்புவார்கள் ? இப்படி இருப்பதால் என்ன செய்யலாம் என்று சந்தனுவும் பலவாறாக யோசித்தான். இறுதியில், “இது கூடாத செயல்; தகாத செயல்” என்று தீர்மானித்தான். அதனால் கவலையும் கொண்டான்.

சந்தனு இப்படி மனக்கவலை கொண்டிருப்பது காங்கேயனுக்குத் தெரிந்தது. அவன் நடந்த விவரங்களைக் கேட்டு அறிந்தான். தந்தையின் கவலையைப் போக்க எண்ணினான். உடனே சத்யவதியின் தந்தையிடம் போனான்.
சந்தனு மகாராஜாவே வந்ததாக எண்ணி அவன் காங்கேயனை மரியாதையாக வரவேற்றான்.
காங்கேயன் அவனைப் பார்த்து, “எனக்கு ராஜ்ஜியம் வேண்டாம். உன் மகளின் பிள்ளைக்கே அது சொந்தம். இது நிச்சயம். என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது மகனாகிய என் கடமையல்லவா ? ஆகையினால் நான் என்னுடைய உரிமையை விட்டுக் கொடுக்கிறேன்” என்றான்.
சந்தனு மகாராஜா பெரிய நீதிமான்; காங்கேயன் அவருடைய பிள்ளையல்லவா? ஆதலால் தம்முடைய கடமையைச் செய்கிறார். இப்படி ஒரு தியாகம் செய்ய இந்த உலகத்திலே எவன் துணிவான்? என்று எண்ணி பெண்ணின் தந்தை மகிழ்ச்சியடைந்தான்.

காங்கேயனைப் பார்த்து, “ஐயா ! நீர் உமக்குரிய அரசுரிமையை விட்டுவிட்டீர். இனி வாக்கு தவறமாட்டீர். இதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. ஆனால் நாளைக்கு உமது மகனோ அல்லது பேரப்பிள்ளைகளோ எப்படி விட்டு விடுவார்கள் ?” என்று கேட்டான்.
காங்கேயன் என்ன செய்வான்? சற்று நேரம் யோசித்தான். “தந்தையின் விருப்பத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்ற வேண்டுமே; இல்லாவிட்டால் என் கடமையைச் செய்யத் தவறியதாகிவிடுமே”-என்று எண்ணி, “நான் கல்யாணமே செய்துகொள்ளப் போவதில்லை. என் ஆயுள் முழுவதும் நான் பிரம்மச்சாரியாகவே இருப்பேன் ! இது சத்தியம்! சத்தியம்!” என்று பிரதிக்ஞை செய்தான்.

காங்கேயனுடைய இந்தப் பிரதிக்ஞையைக் கேட்ட எல்லோரும் ஆச்சரியப்பட்டு புகழ்ந்தார்கள்.
சந்தனு மகாராஜா, “எவன் செய்வான் இப்படிப்பட்ட தியாகம்? இவனைப் பிள்ளையாகப் பெற்ற புண்ணியமே புண்ணியம்!” என்று சொல்லி மகனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.
காங்கேயன் தந்தையை வணங்கி “நான் என்ன செய்துவிட்டேன். என் கடமையை நான் செய்தேன்” என்று சொன்னான். காங்கேயன் ஒருவராலும் செய்யமுடியாத சத்தியத்தைச் செய்தானல்லவா ? அதனால் அவனுக்கு ‘பீஷ்மர்’ என்று பெயருண்டாயிற்று.

பிறகு சத்தியவதியைச் சந்தனு மகாராஜா மணந்து
கொண்டான்!
