யாக்ஞவல்கியர்
யாக்ஞவல்கியர், பிரமராதன் என்பவருடைய பிள்ளை. அவர் வைசம்பாயன முனிவரிடம் வேதங்கள் பயின்றார்.யாக்யவல்க்கியர் என்பவர் பிந்தைய வேதகாலத்தில் மிதிலை நகரத்தில் வாழ்ந்த ஒரு முனிவர். இவர் பிற்காலத்தில் இராமாயணத்தில் வரும் சீதையின் தந்தையான ஜனகனின் குரு ஆவார். இவர் வேறு ஜனக மன்னர் எனவும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அறியலாம்.

அவரது குரு அவரிடம் ‘படி’ என்றால் படிப்பார். ‘நிறுத்து’ என்றால் நிறுத்துவார். அவருடைய குறிப்பறிந்து செய்யவேண்டிய பணிவிடைகளைச் செய்வார். சுறுசுறுப்பாக இருப்பார். குரு சொல்லிக் கொடுப்பதை மறக்கமாட்டார்.
யாக்ஞவல்கியருடைய இந்தக் குணம் கண்டு அவர் குரு அவரிடம் அன்புடையவராக இருந்தார். தமக்குத் தெரிந்த சாஸ்திரங்களையெல்லாம் கற்றுக் கொடுத்தார். சிறிது காலத்தில் யாக்ஞவல்கியர் சகல சாஸ்திரங்களிலும் வல்லவரானார்.
யாக்ஞவல்கியருடைய குரு தினந்தோறும் அரசனை வாழ்த்தி அவனுக்கு மந்திர அட்சதை கொடுப்பது வழக்கம். ஒரு நாள் அவர் அந்த அட்சதையை யாக்ஞவல்கியரிடம் கொடுத்து “அரசனுக்கு அட்சதை கொடுத்துவிட்டு சீக்கிரம் வா” என்று அனுப்பினார்.
யாக்ஞவல்கியர் “இதனால் நமது தவப்பயன் சிறிது குறையும். கொடுக்காவிட்டால் குருவின் கட்டளையை மீறியதாகும். இதற்கென்ன செய்வது ?” என்று ஆலோசித்தார்.
பிறகு குருவின் கட்டளையை மீறுவதற்குப் பயந்து அரசனுக்கு அட்சதை கொடுத்து வந்தார்.
யாக்ஞவல்கியர் அட்சதை கொடுத்த அன்றைய தினம் அரசனுக்குப் பல நன்மைகளுண்டாயின.
அதனால் மகிழ்ச்சியடைந்த அரசன் வைசம்பாயனரை வரவழைத்து “சுவாமி, இனி நாள்தோறும் யாக்ஞவல்கியரே அட்சதை கொண்டு வந்து கொடுக்கட்டும். அதனால் இன்று நான் பல நன்மைகளை அடைந்தேன்” என்றான்.

அவர், “அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு வந்து, யாக்ஞவல்கியரை அழைத்து, “நீ தான் இனி தினந்தோறும் அரசனுக்கு அட்சதை கொடுக்க வேண்டும். இது அரசருடைய விருப்பம்” என்றார்.
யாக்ஞவல்கியர் இதைக் கேட்டதும் குருவைப் பணிந்தார். “அப்படிச் செய்வதால் என் தவம் குறையுமே! என்ன செய்வேன்? வேறு வேலையாயிருந்தாலும் நான் தடை சொல்லாமல் செய்கிறேன்” என்றார்.
குரு, “உன்னிடம் அட்சதை பெறவேண்டும் என்பது அரசனுடைய விருப்பம் என்பதால் நீதான் கொடுக்க வேண்டும்” என்றார்.
யாக்ஞவல்கியர், கைகுவித்து வணங்கி, “சுவாமி, அது தவிர வேறு எந்த வேலையாக இருந்தாலும் செய்யக் காத்திருக்கிறேன்” என்றார். இப்படிச் சொல்லவே குருவுக்கு கோபமுண்டாகி விட்டது.
உடனே அவர் யாக்ஞவல்கியரைப் பார்த்து, “அடே, சிறிதும் பயமில்லாமல் என் கட்டளையை மறுத்தபடியால் நீ இதுவரையில் என்னிடம் கற்றுணர்ந்த வேதம் முதலிய கல்வியெல்லாம் உன்னைவிட்டு நீங்கக் கடவது” என்று சாபம் கொடுத்தார்.

யாக்ஞவல்கியர் அதைக் கேட்டதும் பெரிதும் வருத்தமடைந்தார். அவருக்கு அவரை அறியாமலே துக்கம் வந்துவிட்டது. கண்களிலிருந்து நீர் பெருகிற்று. அந்த நிலையிலேயே குருவைப் பணிந்து அவ்விடம் விட்டுப் போனார். “விதி வலியது” என்று தம்மை நொந்து கொண்டார்.
யாக்ஞவல்கியர் குருவின் கட்டளையைப் பெரிது எனக்கொண்டு அதன்படி நடந்திருக்கவேண்டும். குருவின் கட்டளைப்படி நடந்திருந்தால் இன்னும் மேலான நிலையை அவர் அடைந்திருப்பார்.
குரு எப்போதும் மாணவனுடைய நன்மையை நாடுகிறவரல்லவா?
யாக்ஞவல்கியர் படித்தவராயிருந்தும் அவர் அதை நினைத்துப் பார்க்கவில்லை. குரு கடாட்சமிருந்தால் எதை அடைய முடியாது ? குரு உருவச்சிலையை வழிபட்டு ஏகலைவன் பெருமை அடையவில்லையா?
