history

கஜேந்திர மோட்சம் I குழந்தைகளுக்கான இந்து மதக் கதைகள்

|
Share: |

கஜேந்திர மோட்சம் / குழந்தைகளுக்கான இந்து மதக் கதைகள்குழந்தைகளுக்கான இந்து மதக் கதைகள்

இந்திரத்துய்மன் என்னும் ஓர் அரசன் இருந்தான். அவன் நெடுங்காலமாக அரசாட்சி செய்தான். பிறகு தவம் செய்ய காட்டுக்குப் போனான். காட்டில் அழகிய ஓரிடத்தில் தவச்சாலை அமைத்துக் கொண்டான். பிறகு மனதை இறைவனிடத்தில் செலுத்தித் தவம் செய்தான். இந்திரத்துய்மனிடம் ஒரு நாள் அகஸ்தியர் வந்து, “நீ யார்?” என்று கேட்டார். அவன், அவரை இன்னார் என்று தெரிந்து கொள்ளாமல் அவசரத்தில் “நீ யார், என்னை விசாரிக்க? என் தவத்தைக் கெடுக்க வந்தாயோ ! சீ, போ" என்றான். இந்திரத்துய்மன் இப்படி அகங்காரமாகப் பேசவே அகஸ்தியர் கோபம் கொண்டார். அவன் முகத்தைப் பார்த்து, “அடே, இந்திரத்துய்மா, உன்னை நான் அறியமாட்டேனா? நீ எப்படி இருக்கிறாய் என்று உன்னை விசாரித்தேன். நீ மரியாதையில்லாமல் துடுக்காகப் பேசினாய்! ஆதலால் நீ வெறிகொண்டு திரியும் மதயானையாய் மாறி கஷ்டப்படக் கடவாய்!” என்று சபித்தார். இந்திரத்துய்மன் “சுவாமி, தங்களை நான் இன்னாரென்று தெரிந்துகொள்ளவில்லை. என் பிழையை மன்னிக்க வேண்டும். தாங்கள் யார்?” என்று கேட்டான். அகஸ்தியர் “நான் அகஸ்தியன். அடக்கம் எப்போதும் நன்மையைத் தரும் என்பதை நீ மறந்தாய். அதனால் வந்தது இந்தத் துன்பம்” என்றார். இந்திரத்துய்மன் “சுவாமி, எப்படி இருந்தாலும் என் பிழையைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நான் யானையாக மாறினாலும் எனக்குக் கடவுளுடைய நினைவு எப்போதும் இருக்கும்படி அருள்புரிய வேண்டும்” என்று கேட்டான். அகஸ்தியரும் மனம் இரங்கி, “அரசனே, நீ விரும்பியபடி உனக்கு ஜகதீசனைத் தியானிக்கும் ஞானம் இருந்துகொண்டிருக்கும். யானை வடிவமாக இருக்கும்போதே பகவான் உனக்குக் காட்சி தருவார். அப்பொழுது உன் சாபம் நீங்கும்" என்று சொல்லிப் போய்விட்டார். இந்திரத்துய்மன் உடனே ஒரு பெரிய யானையானான். அந்த யானை பிறகு அந்தக் காட்டிலிருந்த யானைகளுக்கெல்லாம் அரசனாக ஆயிற்று. 'கஜேந்திரன்' என்று பெயர் பெற்றது. ஒருமுறை எல்லா யானைகளுடனும் கஜேந்திரன் ஒரு குளத்துக்குப் போய் நீரில் விளையாடியது. அப்போது கஜேந்திரனுடைய காலை அந்தக் குளத்திலிருந்த ஒரு முதலை பிடித்துக் கொண்டது. முதலை நீருக்குள் இழுக்க, யானை மேலுக்கு இழுக்க இரண்டுக்கும் பலமான சண்டை உண்டானது. கஜேந்திரன் தன்னால் இயன்றவரையில் தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடியது. முடியாமல் போகவே பகவானைத் தியானித்தது. தன் துதிக்கையை உயர நீட்டிக்கொண்டு “ஆபத்து வேளையில் அடியாரைக் காக்கும் ஆதிமூலமே, என் மீது கருணை காட்டு; காப்பாற்று!" என்று கதறியது. கஜேந்திரனின் அபயக்குரல் கேட்ட பகவான் கருடவாகனத்தின் மீது சங்கு, சக்கர, பீதாம்பரதாரியாக அங்கே வந்து, முதலையின் மேல் தமது சக்கரத்தை விடுத்து, அதைக் கொன்று கஜேந்திரனைக் காப்பாற்றினார். கஜேந்திரன் பிறகு முக்தி அடைந்தது.  
Written by Ealuvi Editor
We write and curate insightful essays, technology updates, business trends, and educational topics exclusively in Tamil to empower minds.

Discussion (2)

Ramesh Jul 02, 2026

இந்த தலைப்பைப் பற்றி மேலும் எழுதவும்.

Nisha Jul 02, 2026

மிகவும் அருமையான கட்டுரை. தொடர்ந்து எழுதவும்.