நாபாகன் யார்?
நாபாகன் ஒரு அரசனுடைய நான்காவது பிள்ளை. அரசன் சிறந்த கல்விமான். ஆகையால் தம் பிள்ளைகள் நால்வரையும் கல்வி கற்றுக்கொள்ள ஒரு குருவினிடம் ஒப்படைத்தான்.
நாபாகனுக்கு படிப்பில் அதிக ஈடுபாடு உண்டாயிற்று. அதனால் அவன் தன் குருவின் மனம் கோணாதபடி நடந்து வந்தான்.

குரு அவனைப் பாராட்டி அவனுக்கு நன்றாகக் கல்வி கற்றுக் கொடுத்தார்.
நாபாகன் சுறுசுறுப்பாகப் படித்து வந்தான். ‘ஊக்கமது கைவிடேல்’ என்பது அவ்வையார் வாக்கு அல்லவா ? மற்றவர்கள் சிறிதுகாலம் படித்துவிட்டு நிறுத்திவிட்டனர். நாபாகன் வயதிலே பெரியவன் ஆனான். ஆனாலும் படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்தான்.
“நாபாகன் படிப்பிலேயே கவனமாக இருக்கிறான். ஆகையால் இனிமேல் அவன் வரமாட்டான். ஞானியாகி விடுவான்” என்று அவனுடைய சகோதரர் மூவரும் தீர்மானித்தனர். தங்களுக்கு இருந்த சொத்துக்களை மூவருமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.
சில வருடங்களுக்குப் பிறகு நாபாகன் வீட்டிற்குத் திரும்பி வந்தான்.

தன் அண்ணன்மார்கள் பாகம் பிரித்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்து “எனக்கு என்ன பாகம் வைத்தீர்கள்?” என்று அவர்களைக் கேட்டான்.
மற்ற மூவரும் சேர்ந்து ஆலோசித்து “உன் தந்தையையே உனக்குப் பாகமாக வைத்தோம்” என்றனர்.
நாபாகன் தன் தந்தையிடம் சென்று தன் அண்ணன்மார்கள் சொன்னதைச் சொன்னான்.
தந்தை, வஞ்சகர்களாகிய அவர்களை வெறுத்தார். நாபாகனைப் பார்த்து, “அப்பா, நீ வருத்தப்படாதே. உன்னிடம் கல்விச் செல்வமிருக்கிறது. அது அழியாதது. கவலைப்படாதே. நான் சொல்கிறபடி செய். ரிஷிகள் யாகம் செய்கிறார்கள். நீ அங்கே போய்ப் பார். அவர்கள் பலசமயங்களில் தவறாக மந்திரம் சொல்கிறார்கள். அந்த மந்திரம் உனக்குத் தெரியும். நீ அவர்களுக்குச் சொல்லிக் காட்டு. அவர்கள் உன் மீது விருப்பம் அடைவார்கள். யாகம் முடிந்ததும் அதில் மிச்சமாகும் பொருளை உனக்குக் கொடுப்பார்கள். நீ அதைப் பெற்றுக்கொண்டு சுகமாயிரு” என்றார்.
போனான். நாபாகன் தன் தந்தையின் சொற்படியே அந்த யாகத்துக்குப்

ரிஷிகளுக்குத் தெரியாமலிருந்த மந்திரங்களைச் சொன்னான்.
ரிஷிகள் மகிழ்ச்சியடைந்து யாகம் முடிந்ததும் அதில் மிகுதியாயிருந்த பொருட்களை நாபாகனுக்குக் கொடுத்தனர்.
நாபாகன் அந்தப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு திரும்பினான். “வழியில் ஒருவன் வந்து, யாகத்தில் மிஞ்சும் பொருள் என்னைச் சேர்ந்தது. அதை நீ எப்படிக் கொண்டு போகிறாய்?” என்று அவனைக் கேட்டான்.
நாபாகன், “சரி; அப்படியானால் என் தந்தையைக் கேட்போம். அவர் சொல்லுகிறபடி நடப்போம் வா” என்று சொல்லி அவனைத் தன் தந்தையிடம் அழைத்துக்கொண்டு போனான்.
அரசன் நடுநிலை தவறாதவன். ஆகையினால் அவன் அவர்கள் வழக்கைக் கேட்டு ஆலோசித்து “யாகத்தில் மிஞ்சும் பொருள் ருத்ர மூர்த்தியைச் சேர்ந்தது. இவர் ருத்ரமூர்த்தியானால் இந்தப் பொருள் இவரைச் சேர்ந்ததுதான் ” என்றான்.
வந்த மனிதன் ருத்ர மூர்த்தியே என்பதால் உடனே அவர் தனது சொரூபத்தைக் காட்டினார். நாபாகன் அவரை வணங்கி அவர் பாதத்திலே பொருளை வைத்தான்.

நாபாகனிடம் ருத்ரமூர்த்தி மகிழ்ச்சி கொண்டு அவனை வாரியெடுத்துத் தூக்கி, “அப்பா, நீ நன்றாகச் சாஸ்திரங்களைப் படித்தாய். படித்தவன் என்பதற்கு அடையாளமாக உன் தந்தை சொல்வதை நம்பி நடந்தாய். உன் மீது அதனால் எனக்குக் கருணை உண்டாயிற்று. நீ பாக்கியவான்; குற்றமற்றவன். உனக்கு ஒரு குறையும் வராது. என்னுடைய பொருளாகிய இதை உனக்கே கொடுத்தோம். நீ வைத்துக்கொண்டு சுகமாயிரு” என்று சொல்லி மறைந்தார்.
பிறகு நாபாகன் தனது அண்ணன்மார்களைவிட மேலான நிலைமையிலிருந்து சுகமாக வாழ்ந்தான்.
