அர்ஜுனன் தவம்
அர்ஜுனன் பாண்டவர்களில் ஒருவன். பாண்டவர்கள் துரியோதனனால் காட்டில் வாசம் செய்தனர். அப்பொழுது அர்ஜூனன் ‘பாசுபத அஸ்திரம்’ என்கிற ஒரு தெய்வ அஸ்திரத்தை அடைய சிவபெருமானை நோக்கி இமயமலையில் ஒரு காலில் நின்றபடி தவம் செய்தான். அவன் அந்த அஸ்திரம் பெற்றுவிட்டால் அவனை ஒருவராலும் வெல்ல முடியாது. எல்லோரையும் அந்த அஸ்திரத்தைக் கொண்டு அவன் ஜெயித்து விடுவான்.
இதனால் துரியோதனன் அர்ஜுனனைக் கொல்ல ஓர் அசுரனை ஏவினான். அசுரன் பன்றி வடிவம் எடுத்துக்கொண்டு அர்ஜுனன் முன்னே போனான்.அர்ஜுனன் தவம் செய்ய வந்திருந்தாலும் அவன் தன்னைக் காத்துக்கொள்ள வில்லும் அம்பும் வைத்திருந்தான். கடவுள் எல்லாம் அறிய வல்லவர். ஆகையால் அர்ஜுனனைக் கொல்ல துரியோதனன் அசுரனை ஏவியதை அறிந்தார். உடனே அவர் வேடனாக வேஷம் கொண்டு அங்கே வந்தார்.
அர்ஜுனன், பன்றி தன்னை நோக்கி வருவதைப் பார்த்தான். உடனே வில்லில் அம்பைப் பூட்டி எய்தான். அதே சமயத்தில் சிவபெருமானும் தமது வில்லில் பாணத்தைப் பூட்டி பன்றியின் மேல் எய்தார். இரு அம்புகள் பாய்ந்ததும் பன்றி இறந்தது.
அர்ஜுனனோடு விளையாடி அவனுக்கு தமது தரிசனம் தர சிவன் எண்ணினார். ஆகையால் அவர், “நான் குறி வைத்ததை நீ ஏன் அடித்தாய்? உனக்கு அவ்வளவு துணிவா ? தவம் செய்யும் உனக்கு ஏன் இந்த வேலை?” என்று கேட்டார்.அர்ஜுனன், “அந்தப் பன்றி என் தவத்தைக் கெடுக்க வந்ததால் நான் அடித்தேன். பன்றியை வேண்டுமானால் நீ கொண்டுபோ.
அதைவிட்டு அதிகம் பேசினால், என் வில்லிற்கு இரையாவாய்” என்றான்.அர்ஜுனன் இப்படிச் சொல்லவே, சிவவேடன் “நீ கர்வம் உடையவன் என்று தெரிந்து கொண்டேன். நீ யார் ? அதைச் சொல் முதலில்! பிறகு உன் வில்வித்தையைப் பார்க்கிறேன்” என்றான்.அர்ஜுனன் “நான் பாண்டவரில் ஒருவன். என் பெயர் அர்ஜுனன்!” என்றான்.
சிவவேடன் கோபத்துடன், “தெரிந்து கொண்டேன் உன் யோக்கியதையை, உன் குருவாகிய துரோணாச்சாரியாரின் விக்கிரகத்தைப் பூசித்து, வில்வித்தையிலே தேர்ந்த ஏகலைவன் என்கிற வேடனை நீதானே விரலை அறுத்துக் கொடுக்கும்படி செய்தவன்? ஆதலால் உன்னோடு போர் செய்வது தகும்!” என்றுவில்லைஉயர்த்திப்பிடித்தான்.
அர்ஜுனனும் தன் வில்லை உயர்த்திப் பிடித்தான். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அம்பு எய்தி சண்டை செய்தனர். சற்று நேரத்தில் சிவவேடன் எய்த அம்பு, அர்ஜுனனுடைய வில்லின் நாணை அறுத்தெறிந்தது. நாண் அறுபடவே அர்ஜுனன் தனது வில்லினால் சிவபெருமான் முடி மீது ஓங்கி அடித்தான். சிவனின் முடிமீது அடி விழுந்ததும் மூன்று புவனங்களும் அண்ட சராசரங்களும் கிடுகிடுவென்று ஆடிக் குலுங்கியது.

அர்ஜுனன் அது கண்டு பிரமித்தான். அச்சமயம் சிவவேடன் உருவிலுள்ள சிவபெருமான் ரிஷப வாகனத்தின் மீது பார்வதி தேவியுடன் காட்சி தந்தார். அர்ஜுனன் தன்னோடு சண்டையிட்டது இன்னாரென்று தெரிந்து கொண்டான். உடனே வணங்கித் துதித்தான்.

சிவபெருமான் அவனிடம் அன்பு கொண்டு பாசுபதாஸ்திரம் தந்து மறைந்தார். அர்ஜுனன் ‘உலகமெலாம் சிவமயம்’ என்பது அறிந்து மகிழ்ந்து, தன் சகோதரர்களிடம் போய்ச் சேர்ந்தான்!
