ருக்மாங்கதன் யார்?
ருக்மாங்கதன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் நீதிமானாகவும், சிறந்த தெய்வபக்தி உடையவனாகவும் விளங்கினான்.பெரியோர்கள் அவனை ‘ஏகாதசி விரதம்’ அனுஷ்டித்து வர உத்தரவிட்டனர். அப்படியே அவன் விரதம் இருந்து வந்தான்.தன்னைப் போலவே தன் குடிமக்களும் அந்த விரதம் இருந்துவர அவன் பல உதவிகளைச் செய்தான்.

ருக்மாங்கதனுக்கு ‘தருமாங்கதன்’ என்று ஒரு மகன் இருந்தான். அவன் நல்ல அறிவாளி. ஒப்புயர்வற்ற வீரன். தர்மநெறி தவறாதவன்.ருக்மாங்கதன் தன் அன்பு முழுவதையும் அவனிடமே வைத்திருந்தான். தருமாங்கதனுடைய தாயைத் தவிர வேறொரு தெய்வப் பெண்ணையும்
அவன் திருமணம் செய்திருந்தான். அவள் பெயர் ‘மோகனாங்கி!’
ருக்மாங்கதன் ஏகாதசியன்று ஒருவருடனும் பேசுவதில்லை. எப்போதும் தியானத்திலேயே இருந்து மறுநாள் துவாதசியன்று பூஜை முடிந்தபின் உணவருந்துவான். ருக்மாங்கதன் நெடுங்காலமாக இதைக் கடைபிடித்து வந்தான்.
அப்பொழுது ஒரு ஏகாதசியன்று மோகனாங்கி தன்னிடம் வந்து, எப்போதும்போல மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும்படி அரசனை அழைத்தாள். ருக்மாங்கதனோ காரணம் கூறி மறுத்தான். ஆனால், அவன் அவளை மணந்து கொள்ளும்போது அவனிடம் அவள் ஒரு வரம் கேட்டாள். அவனும் தருவதாக வாக்களித்திருந்தான். “எனக்கு வேண்டும்போது நான் கேட்டு வாங்கிக்கொள்கிறேன்” என்று அப்போது அவள்
சொல்லியிருந்தாள்.
ருக்மாங்கதன் இப்போது தனது விருப்பத்திற்கு இணங்காததினால் அவள் அந்த வரத்தைக் கேட்டாள். அரசன் “அது என்ன, சொல்; தருகிறேன்” என்றான். அவள், “நீர் இன்று என் விருப்பப்படி என்னிடமே வந்து பேசிக்கொண்டிருக்கவேண்டும்” என்றாள்.
ருக்மாங்கதன், “அதைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேள்; தருகிறேன். இன்றைக்கு ஏகாதசி. அதனால் விரதம் தவற மாட்டேன்” என்றான். “அப்படிச் செய்ய சம்மதம் இல்லாவிட்டால் உம்முடைய மைந்தன் தலையை அவனுடைய தாயாரின் முன்பு வெட்டி எனக்குக் கொடும்” என்று அவள் கேட்டாள்.
ருக்மாங்கதன் இதைக் கேட்டதும் “அந்தோ ! இது என்ன கொடுமை! பிள்ளை பலி கேட்கிறாளே !” என்றெண்ணித் துணுக்குற்றான். “இவளை மணந்தது நமது மதியீனம்! இவள் மலடியானதால் இரக்கமில்லாமல் இப்படிக் கேட்கிறாள்! எப்படி என் அருமை மகனை வெட்டுவேன் ? அவன் தான் எப்படி இதைக் கேட்டுத் தன் தலையைக் கொடுக்கத் துணிவான் ? என் மனைவிதான் இதற்கு எப்படித் துணிவாள் ? ஐயோ ! என் விரதத்தைக் கொல்ல வந்த பிசாசோ இவள்?”- என்றெண்ணி மயக்கமடைந்தான்.
தருமாங்கதன் அப்போது அங்கே வந்தான். தந்தை மூர்ச்சையாகிக் கிடப்பதையும் மோகனாங்கி கோபமாயிருப்பதையும் பார்த்து ஓடி சிற்றன்னையின் பாதத்திலே பணிந்து, “அம்மா, அடியேன் உங்களது புத்திரன்.நானிருக்கும்போது உங்களுக்கு என்ன குறை நேர்ந்தது? நான் ஒரு பிழையும் என் மனதறியச் செய்யவில்லையே! என் அன்னையும் செய்ததில்லையே! அப்படியிருக்க தாங்கள் ஏன் கோபமாயிருக் கிறீர்கள்? தந்தை மயக்கமாகிக் கிடப்பதேன் ?” என்று கேட்டான்.

“தருமாங்கதா, நீங்கள் ஒருவரும் ஒரு குற்றமும் எனக்குச் செய்யவில்லை. உன் தந்தை எனக்கு ஒரு வரம் தந்தார். அதை நிறைவேற்றித் தரும்படி நான் அவரைக் கேட்டேன். அதற்கு அவர் பின்வாங்குகிறார். தருகிறேன் என்று சொன்னபின் அதன்படி செய்யப் பின்வாங்கலாமா ? அது வாக்குத் தவறியதாகாதா?” என்று மோகனாங்கி கேட்டாள்.
தருமாங்கதன், “அம்மா, தந்தை சத்தியம் தவறமாட்டார். காரணம் இருக்க வேண்டும். நான் அவரிடம் போய்க் கேட்டு உங்களது கவலையை மாற்றுகிறேன்” என்றான். உடனே தந்தையை இருகரங் கொண்டு தூக்கியெடுத்தான்.
ருக்மாங்கதனும் கண் விழித்து மகனுடைய முகத்தைப் பார்த்தான். அவன் கண்களில் நீர் ததும்பியது. அதைப் பார்த்து தருமாங்கதன், “தந்தையே! ஏன் இந்தத் துக்கம்? புத்திரன் தருமாங்கதன் இருக்கும்போது கலக்கமேன் ?”என்று கேட்டான்.

ருக்மாங்கதன், “நான் எதைச் சொல்ல? உன் சிற்றன்னைக்கு நான் ஒரு வரம் தந்தேன். அவள் அதை இன்று நிறைவேற்றும்படி பிடிவாதம் பிடிக்கிறாள். அவள் விருப்பப்படி நான் நடப்பதென்றால் விரதம் குலைந்து விடும். நெடுங்காலமாகக் கடைபிடித்துவரும் விரதத்தைக் கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அதனால் தயங்குகிறேன். அவள் என்னிடம், ‘உமது வாக்கையும் விரதத்தையும் நீர் காப்பது உண்மையானால் உமது மைந்தன் தருமாங்கதன் தலையை வெட்டி எனக்குக் கொடும்’ என்கிறாள். அதுவும் உன் அன்னையின் முன்பு வெட்டித்தர வேண்டுமாம். மகனே, என்ன கொடுமை பார்த்தாயா?” என்று சொல்லி மகனைத் தழுவிக்கொண்டு அழுதான்.
தருமாங்கதன் “தந்தையே! இதற்கு ஏன் கவலைப்படுகிறீர்கள் ? விரதத்தையும் சொன்ன வாக்கையும் காப்பதுதான் பெரிது! இப்போதே சிற்றன்னையினுடைய விருப்பத்தை முடிப்போம். என் அன்னையாரிடம் சென்று அவரை இவ்விடம் அழைத்து வருகிறேன். அவர் தமது கணவருக்கு வந்த துன்பத்தை நீக்கப் பின்வாங்க மாட்டார்; மகிழ்ந்து ஒப்புக்கொள்வார். என்னை இழப்பதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்” என்று தேறுதல் சொல்லிவிட்டு, உடனே தன் தாயாரிடம் போய்ப் பணிந்தான்.
அவள் அவனைத் தழுவி முத்தமிட்டு, “நீ நீடுழி வாழ்வாய்” என்று ஆசி வழங்கினாள். பின்பு சிற்றன்னையின் வரம் பற்றி தெரிவித்துவிட்டு, தருமாங்கதன் “அம்மா, நான் என் தலையைத் தந்து அவருடைய துன்பத்தைத் தீர்க்கத் துணிந்து விட்டேன். தங்கள் சம்மதம் வேண்டும்” என்றான். தாயார் இதைக் கேட்டதும், “ஆ! மகனே, என் தலைவிதி இப்படியா முடியவேண்டும்?” என்று கீழே விழுந்து மூர்ச்சித்தாள்.
தருமாங்கதன் அவளைத் தாங்கிப் பிடித்து மூர்ச்சை தெளிவித்தான். “அம்மா, பதிவிரதைகளின் கடமையைக் கவனியுங்கள். கணவனுக்கு வந்த சங்கடத்தைத் தீர்ப்பதன் பொருட்டு அவர்கள் எதை இழக்கத்தான் துணிய மாட்டார்கள் ? நான் போனாலென்ன? அம்மா, தர்ம நெறிப்படி செய்யுங்கள். தைரியம் கொள்ளுங்கள். எல்லாம் ஈசன் செயல் என்று துணியுங்கள்” என்றான்.
தருமாங்கதன் தாய் உத்தமப் பெண்மணி. ஆகையால் தன் கணவனுக்கு வந்த துன்பத்தைத் தீர்ப்பதே தன் கடமையென்று தெரிந்து கொண்டாள். உடனே “தருமாங்கதா; வா, போவோம் ! உன் தந்தையைச் சங்கடத்திலிருந்து காப்போம்!” என்று துணிந்து அழைத்தாள்.
தருமாங்கதன், “மிக்க நன்றி அம்மா! இப்போதுதான் நான் தங்களைத் தருமாங்கதனுடைய தாய் என்று கண்டேன்! ருக்மாங்கதரின் மனைவி என்று மகிழ்ச்சியுற்றேன்!” என்றான். தருமாங்கதனுடைய இந்தப் பேச்சைக் கேட்டு தாயார் மனமுருகினாள். பிறகு இருவரும் மகிழ்ச்சியுடன் அரசனிடம் போய் பணிந்து நின்றனர்.
அரசன் அவர்களுடைய மனத்துணிவை அறிந்து தானும் துணிந்தான். அவர்களை மோகனாங்கியின் முன் அழைத்துப்போய், மைந்தனை வெட்டுவதற்குக் கையில் கத்தியை எடுத்து ஓங்கினான். மோகனாங்கி எழுந்து தடுத்தாள். தருமாங்கதன் தந்தையைப் பார்த்து, “தந்தையே! என்னைப் பலியிடுங்கள். என் மனம் குளிர்ந்திருக்கிறது. என்னுடைய அன்பைக் காட்ட சந்தர்ப்பம் நேர்ந்ததல்லவா? என் கடமையைச் செலுத்த காலம் வந்ததல்லவா? தயங்காமல் சிற்றன்னையின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்!” என்றான்.

ருக்மாங்கதன் ‘ஸ்ரீஹரி! ஸ்ரீஹரி!’ என்று பகவானுடைய பெயரைச் சொல்லி மகனை வெட்டினான். அந்த வெட்டு தருமாங்கதனுடைய கழுத்தில் பூமாலையாக விழுந்தது. ருக்மாங்கதன் மறுபடியும் வெட்டக் கையை ஓங்கினான். பகவான், அசரீரியாக, “வேந்தே ! நில்லு ! உன் விரத உறுதியைக் கண்டு மகிழ்ந்தேன். உன் புத்திரன் கடமை வழி நின்றான். உன் மனைவியும் அவ்வாறே செய்தாள். நீங்கள் புண்ணியம் பெற்றீர்கள். உங்களுக்காக புஷ்பக விமானம் வந்திருக்கிறது ஏறிக்கொள்ளுங்கள் ! சொர்க்கத்திற்கு வாருங்கள்! மோகனாங்கி உன் விரதத்தைப் பரிசோதிக்க வந்த தேவமாது. அதனாலேதான் அவள் அப்படிச் செய்தாள். அவளும் குற்றமற்றவள்” என்றார்.

உடனே ருக்மாங்கதன், அவன் மனைவி, மகன் மூவரும் புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றனர்.
மோகனாங்கியும் தேவலோகம் சென்றாள்!
