Posted in

கம்ஸ வதம் | கிருஷ்ணர் கம்சனை வதம் செய்த முழு பகவதப் புராணக் கதை

🚨 Download Sri Lankan Emergency Numbers App for quick access to Police, Ambulance and Fire Brigade.

கம்ஸ வதம்

கம்ஸன் என்று ஒரு யாதவ அரசன் இருந்தான். அவன் மகா கொடியவனாக எல்லோருக்கும் பொல்லாதவனாக இருந்தான். அவன் ஒரு முறை தன் தந்தையை சிறை செய்துவிட்டு, தானே அரசனாகிவிட்டான்.

அவனுக்கு அவனுடைய தங்கை ‘தேவகி’ என்பவளுடைய எட்டாவது பிள்ளையால் மரணம் ஏற்படும் என்று அசரீரி கூறியது. கம்ஸன் அதற்காக தங்கையையும் அவள் கணவன் வசுதேவனையும் சிறையில் அடைத்து வைத்தான். அவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளைக் கொன்றான்.

இதையறிந்த பகவான் ஏழாவது குழந்தையை வசுதேவனுடைய இன்னொரு மனைவியின் கர்ப்பத்திற்கு மாற்றிவிட்டார். அதனால் கம்ஸன் அதனைக் கொல்ல முடியவில்லை. கம்ஸன் கொடியவனாதலால் அவனைக் கொல்ல மகாவிஷ்ணுவே தேவகிக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்தார். அவர் கோகுலாஷ்டமி அன்று இரவில் சந்திரோதய காலத்தில் அவதரித்தார்.

பகவான் அன்றிரவு கம்ஸனையும் சிறைச்சாலை காவலாளிகளையும் அயர்ந்து தூங்கும்படி செய்துவிட்டார்.

கம்ஸன் வருவானே, என்ன செய்வது ? என்று வசுதேவன் பயந்து பகவானைத் துதித்தார். சிறைச்சாலைக் கதவு தானே திறந்துகொண்டது. வசுதேவன் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு கோகுலத்திற்குப் போனார்.

கோகுலம் என்பது வடமதுரைக்கு அருகில் உள்ள ஓர் யாதவர் கிராமம். அங்கே வசுதேவருடைய நண்பர் நந்தகோபர் என்கிற யாதவர் கோமான் வசித்து வந்தார். அவர் மனைவி யசோதையிடம் வசுதேவன் அக்குழந்தையை விட்டுவிட்டு, யசோதைக்கு அப்போது
பிறந்திருந்த மற்றொரு குழந்தையை எடுத்துக்கொண்டு மதுராவுக்கு வந்து மீண்டும் சிறைச்சாலைக்குள் புகுந்துவிட்டார்.

பிறகு சிறைச்சாலைக் கதவு எப்போதும் போல் மூடிக்கொண்டது.

கம்ஸனும் விழித்துக் கொண்டான். காவலாளிகளும் விழித்துக் கொண்டனர். கம்ஸன் சிறைச்சாலைக்கு வந்தான்.
வசுதேவன் அவனிடம் தாம் கோகுலத்திலிருந்து கொண்டுவந்த குழந்தையைத் தந்தார். அது பெண்குழந்தை.
அவன் அதை வாங்கி ஒரு பாறையில் அடிக்கப் போனான். அது அவன் கையிலிருந்து மேலே கிளம்பி, காளியாக மாறி,
“உன்னைக் கொல்லுகிறவன் வேறிடத்தில் இருக்கிறான். அவனைத் தேடிக் கொல்!” என்று சொல்லி மறைந்து விட்டது. கம்ஸன் பிறகு அந்தக் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொலை செய்யப் பலவாறாக முயற்சி செய்தான். அது எப்படி முடியும்? பகவானைக் கொல்ல இவனால் முடியுமா?

யசோதையிடம் வளர்ந்த பகவானுக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டனர். வசுதேவருடைய மற்றொரு மனைவி ரோகிணி என்பவளும் கோகுலத்திலேதான் இருந்தாள். அவளிடம் பகவான் தேவகியின் ஏழாவது குழந்தையைச் சேர்ப்பித்தார் அல்லவா? அது பலராமன் என்னும் பெயரோடு வளர்ந்து வந்தது.

கம்ஸனை வதம் செய்ய வந்தவர்கள் என்று அவர்களைப் பற்றி கோகுலத்தில் ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது. ஆனால் குழந்தைகளின் பேச்சாலும் அவர்கள் செய்யும் லீலைகளாலும் அவர்களை தெய்வப் பிறவிகள் என்று எல்லோரும் எண்ணியிருந்தனர்.

கிருஷ்ணனும் பலராமனும் யாதவப் பிள்ளைகளோடு பிள்ளைகளாய் கூடியிருந்து மாடு மேய்ப்பார்கள்.கம்ஸனுடைய சபைக்கு ஒரு நாள் நாரதர் வந்தார். அவர் கிருஷ்ணனையும் பலராமனையும் இன்னாரென்று கம்ஸனுக்குத் தெரிவித்துவிட்டுப் போய்விட்டார்.

கம்ஸன் அவர்களைக் கொல்வதற்காகப் பல அசுரர்களை ஏவினான். அசுரர்கள் கழுதை வடிவமாகவும், குதிரை வடிவமாகவும், மாடு வடிவமாகவும் வந்தனர்.

அவர்களையெல்லாம் பலராமனும், விளையாட்டாகக் கொன்று விட்டார்கள். கிருஷ்ணனும்

கம்ஸன் பலராம கிருஷ்ணர்களுடைய சாமர்த்தியத்தை அறிந்தபின் அவர்களை தந்திரமாகக் கொல்ல தன் அரண்மனைக்கு வரவழைத்தான். அவர்கள் வரும்போதே வாயிற்படியில் ஒரு பெரிய யானையை வைத்திருந்து அவர்கள் மீது ஏவும்படி யானைப் பாகனுக்கு உத்தரவிட்டிருந்தான். அவன் அப்படியே செய்தான்.

கிருஷ்ணன் அந்த நொடியே அந்த யானையையும், பாகனையும் ஒரு சிரமும் இல்லாமல் கொன்றுவிட்டு உள்ளே சென்றான்.

அங்கே தன்னை எதிர்கொண்டு போரிட வந்த கம்ஸனை, கிருஷ்ணன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவனைக் கீழே தள்ளிக் கொன்றான்.

கம்ஸன் இப்படி மடியவே எல்லோரும் பகவானுக்கு முன்பு இவனுடைய வலிமை செல்லுமா ? தெய்வ பலமே பலம்! அவனன்றி ஓரணுவும் அசைவதுண்டோ ? மூர்க்கன் என்பதால் பகவானை எதிர்த்து நாசமானான் என்று பேசி கம்ஸனை இகழ்ந்தனர்.

பகவானைத் துதித்தனர்.

பகவான் பிறகு வசுதேவரையும் தேவகியையும் சிறையிலிருந்து விடுவித்தார். அவர்கள் சுகமடைந்தனர்.

🚨 Download Sri Lankan Emergency Numbers App for quick access to Police, Ambulance and Fire Brigade.

Leave a Reply